சட்டக் கல்வியில் சேர வழிகாட்டி: NLU மாயை, BCI அங்கீகாரம் மற்றும் வழக்கறிஞர்களை AI ஆக்கிரமிக்குமா?
சட்டம் என்பது வெறும் புத்தக வரிகள் அல்ல; அது நமது அன்றாட வாழ்க்கையின் அங்கம்! சட்டம் படிக்க வேண்டும் என்ற கனவோடு தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், இன்று பல சிக்கலான நடைமுறைப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சட்டக் கல்வியில் சேர நினைக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அத்துணை நுணுக்கங்களையும் இந்த ஆழமான கட்டுரையில் அலசுவோம். நான் ஏகாந்தன்.
1. 15 லட்ச ரூபாய் இழந்தும் வழக்கறிஞராக முடியாத அவலம்
இன்று பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் சட்டக் கல்லூரிகளில் 'மேனேஜ்மென்ட் கோட்டா' (Management Quota) மூலம் சுமார் 15 லட்ச ரூபாய் வரை கட்டணம் செலுத்திச் சேர்க்கிறார்கள். மாணவரும் 5 ஆண்டுகள் படித்து முடித்துப் பட்டமளிப்பு விழாவில் கருப்புக் கோட் அணிந்து நிற்கிறார். ஆனால், அடுத்த நாள் வழக்கறிஞராகப் பதிவு செய்ய மாநில பார் கவுன்சிலுக்கு (Bar Council) செல்லும்போதுதான் மிகப்பெரிய இடி விழுகிறது.
"உங்கள் கல்லூரிக்கு இந்தியப் பார் கவுன்சிலின் (BCI) அங்கீகாரம் இல்லை. உங்களால் வாழ்நாள் முழுவதும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியாது" என்று அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள். 15 லட்ச ரூபாய் பணம், 5 வருட உழைப்பு என அனைத்தும் ஒரே நொடியில் சுக்குநூறாக உடைந்துவிடுகிறது.
எப்படித் தற்காத்துக்கொள்வது? சில கல்லூரிகள் தங்களுக்கு UGC (பல்கலைக்கழக மானியக் குழு) அங்கீகாரம் இருப்பதை மட்டுமே காட்டி மாணவர்களை ஏமாற்றுகின்றன. ஆனால், சட்டக் கல்வியைப் பொறுத்தவரை BCI அங்கீகாரம் மட்டுமே இறுதியானது. எந்தக் கல்லூரியில் சேருவதற்கு முன்பும், BCI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில் (List of Approved Law Colleges) அந்தக் கல்லூரியின் பெயர் இருக்கிறதா என்பதைப் பெற்றோர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
2. சட்டக் கல்வி: ஒரு 'Premium' தொழில்முறையாக மாறியதன் பின்னணி
90-களில் மருத்துவமோ, பொறியியலோ கிடைக்காதவர்கள் தேர்ந்தெடுக்கும் 'Plan B' படிப்பாகவே சட்டம் இருந்தது. ஆனால், 1991-ல் நடந்த உலகமயமாக்கலுக்குப் (Liberalization) பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தன; அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property), சைபர் சட்டங்கள், கார்ப்பரேட் இணைப்புகள் (Mergers) எனப் புதிய சட்டக் களங்கள் உருவாயின. இதனால் வழக்கறிஞர்களின் தேவையும் பல மடங்கு உயர்ந்தது. இன்று சட்டம் ஒரு 'Premium Professional Course' ஆக உருவெடுத்துள்ளது.
3. 5 ஆண்டுப் படிப்பு vs 3 ஆண்டுப் படிப்பு: எது சிறந்தது?
பள்ளிக்கூடம் முடித்தவுடனேயே சட்டக் கல்விக்குள் நுழைவது சிறந்ததா, அல்லது வேறு ஒரு டிகிரி முடித்துவிட்டு வருவது சிறந்ததா என்ற விவாதம் நெடுநாட்களாக உள்ளது. BCI பார்வையில் இரண்டுமே நூற்றுக்கு நூறு சமமான தகுதியுடையவைதான். ஆனால், நடைமுறையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது:
- 5 ஆண்டுப் படிப்பு (5-Year Integrated LLB): 12-ஆம் வகுப்பிலேயே இலக்கு தெளிவாக இருப்பவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த அஸ்திவாரம். ஒரு செடியை விதையிலிருந்தே சட்டத்தின் தன்மையோடு வளர்ப்பது போன்றது இது.
- 3 ஆண்டுப் படிப்பு (3-Year LLB): இது ஏற்கனவே வளர்ந்த ஒரு மரத்தில் புதிய ஒட்டுக்கிலையை உருவாக்குவது போன்றது. பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஒருவரோ அல்லது பி.காம் படித்த ஒருவரோ சட்டம் படிக்கும்போது, நாளை ஒரு சைபர் கிரைம் வழங்கிலோ அல்லது வருமான வரி மோசடி வழக்கிலோ வாதிடும்போது, மற்ற வழக்கறிஞர்களை விட 100 மடங்கு சிறப்பாகத் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கையாளுவார்கள்.
4. NLU (தேசியப் பல்கலைக்கழகங்கள்) மீதான மாயையும், மாநிலக் கல்லூரிகளின் நிஜமும்
சட்டம் படிக்க வேண்டும் என்றவுடனேயே இன்று பலரும் CLAT (Common Law Admission Test) தேர்வு எழுதி, NLU-வில் (National Law University) சேருவதை 'சட்டக் கல்வியின் ஐஐடி-யில்' சேருவது போலப் பெருமையாகக் கருதுகிறார்கள். ஆனால் இதில் ஒரு மிகப்பெரிய முரண்பாடு உள்ளது.
NLU-வில் படித்து வெளியேறும் பெரும்பாலான மாணவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சட்ட ஆலோசகர்களாக (In-house Counsel) மாறிவிடுகிறார்களே தவிர, அவர்கள் நேரடியாக நீதிமன்றங்களுக்கு வருவதில்லை. சாதாரண மக்களின் நிலப் பிரச்சனை, வரதட்சணைக் கொடுமை, மனித உரிமை மீறல்கள், ஜாமீன் வழக்குகளுக்காக அவர்கள் மாவட்ட அல்லது உயர் நீதிமன்றங்களில் நிற்பதில்லை.
நிஜமான நீதிமன்ற வழக்கறிஞர்களை உருவாக்குவது டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மாநில அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள்தான். இங்குப் படிக்கும் மாணவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலைகளில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு வறுமை தெரியும், உள்ளூர் காவல் நிலையங்களின் அத்துமீறல் தெரியும், குறுக்கு விசாரணை செய்யும் (Cross-Examination) உளவியல் தெரியும். இந்த அடித்தட்டு மக்களுக்கான நிஜமான நீதியை நிலைநாட்டுவது மாநிலக் கல்லூரிகளில் படிக்கும் வழக்கறிஞர்கள்தான்.
5. AI (செயற்கை நுண்ணறிவு) வழக்கறிஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்குமா?
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால், ChatGPT போன்ற AI மாடல்கள் கார்ப்பரேட் சட்டத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பல நூறு பக்கங்கள் கொண்ட வணிக ஒப்பந்தங்களை (Contracts) வாசிப்பதற்கும், அதில் உள்ள பிழைகளைக் கண்டுபிடிப்பதற்கும் முன்பு பல கார்ப்பரேட் வழக்கறிஞர்கள் தேவைப்பட்டனர். இன்று அந்த வேலையை AI ஒரு சில நொடிகளில் துல்லியமாகச் செய்துவிடுகிறது. இதனால், நீதிமன்றப் பக்கம் வராமல் ஏசி அறைகளில் ஒப்பந்தங்கள் தயாரிக்கும் கார்ப்பரேட் வழக்கறிஞர்களுக்கு வருங்காலத்தில் வேலைவாய்ப்புச் சுருங்கும் அபாயம் நிச்சயமாக உள்ளது.
ஆனால் நீதிமன்ற வழக்கறிஞர்களை AI-ஆல் தொட முடியுமா?
நிச்சயமாக முடியாது! ஒரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கும் ஒரு சாட்சியிடம் ஆங்கிலத்தில் அல்லாமல் உள்ளூர் மொழியில் கேள்வி கேட்டு, அவனது உடல் மொழியைக் (Body Language) கணித்து, அவன் சொல்லும் பொய்யை உடைத்து உண்மையை வரவழைக்கும் குறுக்கு விசாரணையை (Cross Examination) எந்த ஒரு அல்காரிதத்தாலும் செய்ய முடியாது. நீதிபதியின் மனநிலையைப் புரிந்துகொண்டு, உணர்வுபூர்வமான வாதங்களை முன்வைப்பது மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம். எனவே, களத்தில் இறங்கிப் போராடும் உண்மையான 'Litigation Lawyers' என்றென்றும் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்கள்.