குற்றவியல் விசாரணை (Trial): இளம் வழக்கறிஞர்கள் சாதிக்க வேண்டிய மேடை - ஒரு முழுமையான வழிகாட்டி

முன்னுரை 

ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணை (Trial) என்பது என்பது நீதிமன்ற அறையில் நடக்கும் வெறும் விவாதம் மட்டுமல்ல; அது ஆவணங்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்து, உண்மையை வெளிகொண்டு வரும் ஒரு கலை. ஒரு வழக்கறிஞரின் அறிவு, பொறுமை மற்றும் சமயோசித புத்தி ஆகியவற்றிற்கு வைக்கப்படும் மிகப்பெரிய தேர்வு. குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் தங்களை ஒரு சிறந்த 'Trial Lawyer'-ஆக உருவாக்கிக்கொள்ள இந்த ஆழமான புரிதல் அவசியம்.

1. குற்றப்பத்திரிகையை (Charge Sheet) நுணுக்கமாக ஆய்வு செய்தல்

Final Report (Section 173 CrPC / Section 193 BNSS): காவல்துறையின் இறுதி அறிக்கை என்ன சொல்கிறது என்பதை முதலில் கவனிக்கவும். குற்றப்பத்திரிகை என்பது வெறும் காகிதக் கட்டல்ல, அது வழக்கின் வரைபடம்.

பிரிவு 173 CrPC (புதிய சட்டம் BNSS பிரிவு 193): காவல்துறையின் இறுதி அறிக்கையை முதலில் முழுமையாக வாசியுங்கள்.

முரண்பாடுகளைத் தேடுதல்: FIR, 161 வாக்குமூலங்கள், மற்றும் சம்பவ இட வரைபடம் (Observation Mahazar) ஆகியவற்றுக்கு இடையே உள்ள நேர, இட மற்றும் நபர் சார்ந்த முண்பாடுகளை (Discrepancies) அடிக்கோடிடுங்கள்.

சாட்சிகளின் பட்டியல் (List of Witnesses): அரசுத் தரப்பு எந்தெந்த சாட்சிகளை முன்னிறுத்துகிறது? அவர்களின் பின்னணி என்ன? என்பதை ஆராயுங்கள்.

குற்றப்பத்திரிகையில் உள்ள சாட்சிகளின் வரிசைப்படி விசாரணை நடக்காது. அன்று நீதிமன்றத்திற்கு யார் வந்திருக்கிறார்களோ, அவரைத்தான் விசாரிக்க முடியும்.

எனவே, 'Preparation in Advance' என்பது மிக முக்கியம். ஒவ்வொரு சாட்சியிடமும் என்னென்ன முரண்பாடுகளைக் கேட்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தனித்தனி தாள்களில் (Witness Notes) தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

தடயவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகள்: பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் (Forensic) முடிவுகளைக் குற்றப்பத்திரிகையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

2. கோப்புகளைக் கையாளும் முறை (Case Management)

முக்கியமான வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் எந்தப் பக்கத்தில் உள்ளன என்பதை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். ஒரு பெரிய குற்றவியல் வழக்குகளில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகளில் நமக்குத் தேவையான தகவலை நொடிப் பொழுதில் எடுப்பதே திறமை.

பக்க எண்கள் (Pagination): சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை முறையான பக்க எண்களுடன் வரிசைப்படுத்துங்கள்.

நிறக் குறியீடுகள் (Color Coding): முக்கியமான சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கு 'Stick-on notes' அல்லது வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்துவது குறுக்கு விசாரணையின் போது பதற்றத்தைக் குறைக்கும்.

3. குறுக்கு விசாரணை (Cross-Examination) எனும் கலை

குறுக்கு விசாரணை என்பது சாட்சியை திணறடிப்பது அல்ல, உண்மையை வெளியே கொண்டு வருவது.

முன்கூட்டியே தயாரித்தல் (Preparation in Advance): ஒவ்வொரு சாட்சியிடமும் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே தனித்தனி தாள்களில் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

கேள்விகளின் வரிசை: ஒருபோதும் சாட்சியிடம் 'ஏன்?' அல்லது 'எப்படி?' என்ற திறந்த கேள்விகளை (Open-ended questions) கேட்காதீர்கள். அதற்குப் பதில் "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்லக்கூடிய 'Leading Questions' மூலம் சாட்சியை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

சாட்சியத்தை உடைத்தல் (Impeachment): சாட்சியிடம் இருந்து உங்கள் தரப்புக்குச் சாதகமான உண்மைகளை முதலில் (Admissions) ஒப்புக்கொள்ளச் செய்யுங்கள். சாட்சி காவல்துறையிடம் சொன்னதற்கும் நீதிமன்றத்தில் சொல்வதற்கும் உள்ள மாற்றங்களைச் சுட்டிக்காட்டி அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குங்கள்.

Re-Examination' மற்றும் 'Recall' நடைமுறைகள்

குறுக்கு விசாரணையின் போது சாட்சி குழப்பமடைந்தால் அல்லது புதிய தகவல்கள் வெளிவந்தால், அதை எப்படிச் சரிசெய்வது?

பிரிவு 311 CrPC (Section 348 BNSS): ஒரு சாட்சியை மீண்டும் அழைத்து விசாரிக்க (Recall) வேண்டிய சூழலை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த புரிதல் அவசியம்.

4. மின்னணு ஆதாரங்கள் (Electronic Evidence)

இன்றைய டிஜிட்டல் உலகில் டிஜிட்டல் ஆதாரங்களின் பங்கு முக்கியமானது.

CCTV மற்றும் WhatsApp: இவற்றை ஆதாரமாகத் தாக்கல் செய்யும்போது அல்லது அவற்றை உடைக்கும்போது (Impeach), பிரிவு 65B சான்றிதழ் (Certificate under Section 65B of Evidence Act / Section 63 BSA) முறையாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

அறிவியல் சான்றுகள்: பிரேதப் பரிசோதனை அறிக்கை (Post-mortem report) மற்றும் தடயவியல் (Forensic) முடிவுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

5. நீதிமன்ற அறையில் கடைப்பிடிக்க வேண்டியவை

நேரம் மற்றும் ஒழுக்கம்: நீதிமன்ற நடைமுறைகளை முன்கூட்டியே கவனித்து, நீதிபதியின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ளுங்கள்.

சுருக்கமாகப் பேசுதல்: தேவையற்ற வாதங்களைத் தவிர்த்து, வழக்கின் முக்கிய புள்ளிகளில் (Crux of the case) மட்டும் கவனம் செலுத்துங்கள்.

நீதிபதியுடனான உரையாடல்: நீதிபதியின் கேள்விகளுக்குப் நிதானமாகப் பதிலளியுங்கள். வாதத்தின் போது உரிய உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை (Case Laws) மேற்கோள் காட்டுவது உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கும்.

நம்பிக்கையும் நிதானமும்: தொடக்கக் காலங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் "தோல்வி என்பது வழக்கிற்குத்தான், வழக்கறிஞருக்கு அல்ல" என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குறிப்பு: ஒரு திறமையான வழக்கறிஞர் சட்டப் புத்தகங்களை மட்டும் படிப்பவர் அல்ல, மனித இயல்புகளையும் சூழ்நிலைகளையும் கூர்ந்து கவனிப்பவர்.

முடிவுரை:

இளம் வழக்கறிஞர்கள் ஆரம்ப காலங்களில் சில பின்னடைவுகளைச் சந்திக்கலாம். ஆனால், ஒவ்வொரு Trial-ம் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கும். சட்டத்தை அறிவது ஒரு கலை என்றால், அதை நீதிமன்றத்தில் கையாளுவது ஒரு தவம். இளம் வழக்கறிஞர்களின் இந்தத் தவம் கைகூட சட்டவியல் @JurisprudenceTamil மற்றும் lawtamil.in ஆகிய தளங்கள் எப்போதும் துணை நிற்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை